தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் ஒரு யூனிட்டில் ஆக்சிஜன் உற்பத்தி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் ஒரு யூனிட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் துவங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலின் அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 13ம் தேதி முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக 4.18 டன் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. பின்னர் ஏற்பட்ட பழுது காரணமாக சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கடந்த 18ம் தேதி முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது.

நேற்று உற்பத்தி செய்யப்பட்ட 23.12 டன் ஆக்சிஜனில் 5.70 டன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 5.76 டன் ஆக்சிஜன் நாமக்கல் லட்சுமி ஆக்சிஜன் நிறுவனத்திற்கும், 0.58 டன் தூத்துக்குடி அரசன் காஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்திற்கும், 11.08 டன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் அலகில் இதுவரை மொத்தம் 320 டன்களுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்டர்ெலைட் ஆலையில் மேலும் ஒரு யூனிட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நேற்று மாலை துவங்கியது. இன்றோ அல்லது நாளையோ இந்த யூனிட்டிலும் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கும் என்று தெரிகிறது. ஆலையில் உற்பத்தி செய்யப்படும் வாயு நிலையில் உள்ள ஆக்சிஜனை, அதற்கென தனியாக உள்ள பி.டி. வகை ஆக்சிஜன் சிலிண்டர்களில் நிரப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: