ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: கொரோனா தொற்றால் தள்ளி வைக்கப்பட்ட  நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள், வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்  என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் 14வது சீசன் கடந்த ஏப். 9ம் தேதி சென்னையில் தொடங்கியது.   வீரர்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதை  அடுத்து மே 3ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா-பெங்களூர் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  அடுத்த நாள் மேலும் பலர் தொற்றுக்கு ஆளாக,   ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக  மே 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெற வேண்டிய நிலையில் 29 ஆட்டங்கள் மட்டுமே   நடந்திருந்தன.  எஞ்சிய 31 ஆட்டங்கள் எ ப்போது  என்று தெரியாத நிலையில் வெளிநாட்டு வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் இந்திய அணி   அடுத்த மாதம் முதல்  செப்டம்பர் 14ம் தேதி வரை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது.

இந்நிலையில எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்கள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. கூடவே ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடம் பிசிசிஐ பேசி வந்தது. அதற்கேற்ப  பிசிசிஐ  சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. காணொலி மூலம்  நடந்த கூட்டத்தில்  எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்ளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், ‘செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இந்தியாவில் மழைக்காலம் என்பதால்  ஐபிஎல் தொடரின்  எஞ்சிய ஆட்டங்கள்  அமீரகத்தில் நடத்த  பொதுக்குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இந்தியாவில்  2021  டி20 உலக கோப்பை  நடத்துவதற்கான ஏதுவான காலத்தை  முடிவு செய்ய வசதியாக  ஐசிசியிடம்  கால  அவகாசம் கேட்க  உள்ளோம் ’ என்று கூறியுள்ளார். எனவே இங்கிலாந்து தொடர் முடிந்ததும் , அமீரகத்தில்  நடப்பு ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவது உறுதியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் முழுவதும் அமீரகத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வீரர்கள் சந்தேகம்

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கும்போது வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது கடினம். காரணம்... அந்த நேரத்தில் இங்கிலாந்து - வங்கதேசம், தென் ஆப்ரிக்கா - நெதர்லாந்து, நியூசிலாந்து - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்கள் நடக்க உள்ளன. கூடவே  வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரும் நடைபெற உள்ளது. எனவே டி வில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா) போன்ற ஓய்வு பெற்ற வீரர்களை தவிர மற்ற வெளிநாட்டு வீரர்கள்  அமீரக ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கடினம்.

Related Stories: