சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீது மேலும் 4 மாணவிகள் பாலியல் புகார்: தனித்தனி வழக்காக பதிவு செய்ய முடிவு: சட்ட வல்லுநர்களுடன் போலீசார் ஆலோசனை

சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது மேலும் 4 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு புகாரையும் தனித்தனி வழக்காக பதவி செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் மேலும் பல வழக்கில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. சென்னை கே.கே.நகரில் பத்மா சேஷாத்ரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மாணவிகளுக்கு அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் ெதாந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில்  அவரது நடவடிக்கைகள் எல்லை மீறி சென்றதாலும் மாணவிகள் பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மத்திய அரசுக்கு நெருக்கமானவர்களுடன் இந்த பள்ளியின் நிர்வாகத்தினர் நெருக்கமாக உள்ளதால், முதலில் புகார் கொடுக்க பயந்தனர். பின்னர் ஆசிரியரின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்ததால், சமூக வலைதளங்களில் புகார் செய்தனர்.

அதைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த கண்டனத்தைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி விசாரணையை தொடங்கினார்.  முதலில் பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு மறுத்தது. பின்னர் விசாரணைக்கு சம்மதித்தது. போலீசின் பிடி இறுகியதால், ஆசிரியர் ராஜகோபாலனை, சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்தநிலையில் ராஜகோபாலனை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் புகார் செய்யலாம் என்று வாட்ஸ் அப் எண்ணையும் அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஏராளமான மாணவிகள் மற்றும் பெற்றோர் வாட்ஸ் அப் எண்ணில் புகார் செய்தனர். புகார்கள் குவியத் தொடங்கியதால், போலீசார் ஒரு கட்டத்தில் அசந்து விட்டனர். பின்னர் அதிகமாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மட்டும் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்தனர். புகார் கொடுத்த மாணவிகள் 3 பேரிடம் நேற்று முன்தினம் வரை விசாரணை நடத்தினர். நேற்று மேலும் ஒரு மாணவி, போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுவரை முதலில் புகார் கொடுத்தவரையும் சேர்த்து 5 மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். அதை போலீசார் வாக்குமூலமாகவும் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு மாணவிகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனித்தனி சம்பவங்கள் என்பதால் ஒரே வழக்காக விசாரிக்காமல், தனித்தனி வழக்காக பதிவு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளின் பாதிப்பு குறித்து விசாரணை நடத்திய பெண் போலீசாரே, கண் கலங்கும் அளவுக்கு ஆசிரியர் ராஜகோபாலனின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. இதனால் அவருக்கு எதிரான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். மேலும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து, ஒவ்வொரு வழக்கிலும் அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தவும் கே.கே.நகர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான விண்ணப்பத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினாலும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

அதேநேரத்தில், மாணவிகள் பலரிடம் ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படங்களை தன்னுடன் வேலை செய்யும் சில ஆசிரியர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும், ஆசிரியர் ராஜகோபாலன் குறித்தும் பள்ளி நிர்வாக அதிகாரிகளிடம் கடந்த 3 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் சிலரை விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரித்த பிறகு மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: