பத்மா சேஷாத்திரி பள்ளி தவறு செய்யவில்லை என்றால் வக்கீலாக சுப்பிரமணியசாமி எதிர்கொள்ள வேண்டும்; சாதியை கொண்டு அல்ல: விஜயதரணி எம்எல்ஏ சூடான பேட்டி

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு ஆதரவாக சுப்பிரமணிய சாமி இவ்வளவு எமோஷனல் ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் பள்ளிக்கு வக்கீலாக இருந்து சட்ட ரீதியாக சந்திக்க வேண்டும். சாதி, மதமாக பார்த்து குற்றவாளிகளுக்கு உதவ முயற்சிக்கக் கூடாது என்று விஜயதரணி எம்எல்ஏ கூறினார். சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக வந்து நின்றது போன்ற சம்பவங்கள் தற்போது வெளியே வந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், பள்ளி மீதான விசாரணை மற்றும் விமர்சனங்களுக்கு ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதும் ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியின் டிவிட்டர் பதிவு என்பது விசாரணை வளையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளியை காப்பாற்றும் வகையில் இருப்பதால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். பள்ளி மாணவிகள், ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதை கண்டிக்கும் வகையிலான கருத்துகள் எதையும் சொல்லாமல், பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்பதை மட்டுமே குறிவைத்து அவரது செயல்பாடுகள் இருப்பது சமூக பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

அவரது செயல்பாடுகளுக்கு தலைவர்கள் பலர் கண்டனங்களுடன் கூடிய தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான விஜயதரணி கூறியதாவது: குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கக்கூடிய யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தனக்கு நடக்கும் கொடுமைகளை யாரிடமும் சொல்ல பெண் குழந்தைகள் பயப்படுகின்றனர். சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்த ஒரு பெண் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பள்ளியில் நடந்த சம்பவத்தை இப்போது டிவிட் பண்ணியுள்ளார். அப்போது பள்ளியில் நீச்சல் பயிற்சி பெற்ற போது, அந்த மாஸ்டர் தவறான முறையில் நடந்து கொண்டதை பள்ளி முதல்வரிடம் தெரிவித்த போது, நீ எத்தனாவது ரேங்க் எடுக்கிறாய்? 20வது ரேங்க் என்று சொன்ன உடன், உனக்கெல்லாம் இந்த புகார் தேவையா? என்று திட்டி அனுப்பியிருக்கிறார்.

இந்த தகவலை இப்போது பதிவிட்டுள்ளார். இதற்கெல்லாம், அந்த பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் என அனைவருமே காரணம். படித்து முடித்து வெளியில் சென்ற நிறைய பெண்கள் பலர் தங்கள் பள்ளி வாழ்க்கையில் நடந்த இதுபோன்ற சம்பவங்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படி என்றால் மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி பதிவு செய்யும் புகார்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் எந்த பள்ளியில் பணிபுரிந்தாலும் அவர்களை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும். சுப்பிரமணிசாமியை பொறுத்தவரை நேர்மறையான விஷயத்துக்கு எப்போதும் ஆதரவு தெரிவிக்க மாட்டார். அப்படி இருக்கும் போது சுப்பிரமணியசாமி பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து யோசிக்க வேண்டும்.

இதில் அனைவருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. ஒரு புகாரை மாணவிகள் சொல்லும் போது ஆய்வு செய்து எந்த மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் சாத்திய கூறுகள் உள்ளது. அப்படி இருக்கும் போது பள்ளிக்கு ஆதரவாக சுப்பிரமணியசாமி இவ்வளவு எமோஷனல் ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு சட்டம் நன்றாக தெரியும். அதனால் சட்டரீதியாக அந்த பள்ளி தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.

 ஆனால் இந்த விவகாரத்தில் கூட்டு பொறுப்பு இல்லை என்பதை சுப்பிரமணியசாமியால் மறுக்க முடியுமா?. மாணவிகள் அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த அளவுக்கு வந்துள்ளது. பெண் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தான் சுப்பிரமணியசாமி முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் அவர் பார்க்க வேண்டுமே தவிர சுயநலத்தோடு இந்த விவகாரத்தை பார்க்கக் கூடாது. அந்த பள்ளிக்கு வக்காலத்து வாங்குவது தவறு. ஒரு தவறு என்று வரும் போது தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் பள்ளி நிர்வாகம் இல்லாத போது, அதை தட்டி கேட்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

அதை அரசு பயன்படுத்தக்கூடாது என்று சுப்பிரமணியசாமி சொல்வது எந்த விதத்தில் நியாயம்.  பள்ளி மீது தவறு இல்லை என்பது சட்ட ரீதியாக மட்டுமே சந்திக்க வேண்டும். அதற்கு சுப்பிரமணியசாமி வக்கீலாக இருந்து கொள்ளட்டும். இதில் சாதி, மதத்தை கொண்டு வரக்கூடாது. மாணவிகள் புகார் சொன்ன போதே அந்த ஆசிரியர்கள் மீது பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியிருந்தால் அந்த நிர்வாகத்தின் மீது யாரும் தவறு சொல்லப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: