ரயில்வே தொழிலாளர் 15,600 பேருக்கு இலவச உணவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 10ம்  தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில் நிலையத்தில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதித்தனர். இதையடுத்து, சுமார் 80 சுமை தூக்கும் தொழிலாளார்கள் உள்பட ரயில்வேயை நம்பி பிழைப்பு நடத்தும் 300 ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து இலவசமாக ரூ.1,031 மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், அரிசி, பருப்பு, மைதா, ரவை, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கும். மேலும், தன்னார்வலர்கள் மூலம், கடந்த 14ம் தேதி முதல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், 18ம் தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையத்திலும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை 15,600 பேருக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிற்பகல் நேரத்தில், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம் அடங்கிய உணவு பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.

Related Stories: