உலக கோப்பை சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் வங்கதேசம் முதலிடம்

தாக்கா: இலங்கை அணிக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி சாதனை படைத்த வங்கதேச அணி, ஐசிசி ஆண்கள் உலக கோப்பை சூப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வங்கதேச அணி 33 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 48.1 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக விளையாடிய முஷ்பிகுர் ரகிம் 125 ரன் (127 பந்து, 10 பவுண்டரி) விளாசினார். மகமதுல்லா 41, லிட்டன் தாஸ் 25, கேப்டன் தமிம் 13, சைபுதின் 11 ரன் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் சமீரா, சந்தகன் தலா 3, இசுரு உடனா 2, ஹசரங்கா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 40 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதைத் தொடர்ந்து டி/எல் விதிப்படி வங்கதேச அணி 103 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

முஷ்பிகுர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால் 2-0 என முன்னிலை பெற்றதுடன் இலங்கைக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை முதல் முறையாக கைப்பற்றி வங்கதேச அணி சாதனை படைத்தது. சொந்த மண்ணில் விளையாடிய 11 ஒருநாள் போட்டித் தொடர்களில் வங்கதேசம் 10 தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றது சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லாது, ஐசிசி உலக கோப்பை சூப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் வங்கதேச அணி முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

அந்த அணி 8 போட்டியில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 50 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் தலா 40 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் தலா 30 புள்ளிகள் பெற்று முறையே 5வது, 6வது, 7வது இடத்தில் உள்ளன. இந்தியா 6 போட்டியில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 29 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் பின்தங்கியுள்ளது (1 புள்ளி பெனால்டி).

இலங்கை - வங்கதேசம் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது.

Related Stories: