விசாகப்பட்டினத்தில் உள்ள எச்பிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பொதுமக்கள் அச்சம்

திருமலை: விசாகப்பட்டினத்தில் உள்ள எச்பிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆந்திர மாநிலம்,  விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பெட்ரோல், டீசல், தார் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்தது. அங்கு பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலறி அடித்து  கொண்டு வெளியேறினர்.  தீ மளமளவென பற்றிக்கொண்டு மூன்று முறை பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். மேலும், கரும் புகையுடன் வானத்தை முட்டும் அளவிற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.

உடனடியாக தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனமும், விசாகப்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதில் எரிவாயு உற்பத்தி செய்யும் மையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து, இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது, தீ விபத்திற்கான காரணம்,  சேத விவரங்கள் போன்றவை நிறுவனத்தின் சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர் சேதம் இல்லை

தொழிற்சாலையில், கச்சா எண்ணெய் பதப்படுத்தும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு  வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். மேலும், குளிரூட்டும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இதையடுத்து சில மணி நேரம் கழித்து பெட்ரோலியம் சுத்திகரிப்பு பணிகள்  தொடங்கியுள்ளது என தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: