கரூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்

கரூர் : தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் நேற்று கரூரில் அனைத்து கடைகளும் செயல்பட்டன.

இன்று 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக, 22, 23ம்தேதி முழுவதும் போக்குவரத்துக்கும் அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளும் வகையில் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம் எனவும் அறிவித்திருந்தது.

வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று அனைத்து கடைகளும் செயல்படலாம் என அறிவித்ததால் காலை முதல் இரவு வரை கரூர் நகரம் பரபரப்புடன் காணப்பட்டது. கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, தெற்கு மற்றும் வடக்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், புதுத்தெரு போன்ற அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டதால் மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

காலை முதல் மாலை வரை அனைத்து பகுதிகளிலும் வழக்கமான செயல்பாடு போல கரூர் நகரம் நேற்று ஒரு நாள் முழுவதும் களைகட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்

குளித்தலை: குளித்தலை காவேரி நகரில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் குளித்தலை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இறைச்சிக் கடைகள் மக்கள் கூட்டம் களைகட்டியது. அப்போது கூட ஒரு சிலர் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பித்தது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக் கொண்டு முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் ஊரடங்கு காலத்தில் இனிமேல் டூவீலரில் சம்பந்தமில்லாமல் சாலையில் சுற்றித் திரிந்தால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

பரபரப்பில் கரூர் பஸ் நிலையம்

இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளதால் கரூர் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்லும் ஆர்வத்தில் ஏறிச் சென்றனர்.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று 24ம்தேதி) முதல் 31ம்தேதி வரை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், 22, 23ம்தேதி அன்று கடைகள் அனைத்தும் செயல்படும் எனவும், பஸ் போக்குவரத்தும் இரவு 9 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை முதல் கரூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் புறப்பட தயாராக இருந்த நிலையில், பயணிகள் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், நேற்று கரூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து துவங்கியது. கரூர் நகரத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ்களில் ஏறிச் சென்றனர். 13 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று ஒரு நாள் பஸ் போக்குவரத்து நடைபெற்றதால் கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: