சிங்கப்பூரில் நிதி திரட்டி காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய மருத்துவ மாணவி!: மாஸ்க் அணியவும், வீட்டில் இருக்கவும் வேண்டுகோள்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிதி திரட்டி காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கியுள்ளார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட  மருத்துவ மாணவி. சிங்கப்பூரில் வசிக்கும் சுரேஷ் நாச்சியப்பன், நாகம்மை தம்பதிகளின் மகளான திரணி, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவம் பயின்று வருகிறார். தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படிப்பை தொடர்கிறார் திரணி. தமது பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிட முன்வந்தார். அதற்காக சிங்கப்பூரில் உள்ள தன் நண்பர்கள் மூலம் நிதி திரட்டி சிவகங்கை செஞ்சுலுவை சங்கத்திற்கு அனுப்பி வைத்தார். 

அதன் மூலம் வாங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கும்படி திரணி கேட்டுக்கொண்டார். அதன்படி இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகை ஆட்டி படைக்கும் கொரோனா பிடியில் சிக்காமல் தவிக்கும் மனிதர் குறித்து பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திரணி தவறவில்லை. ஊரடங்கு, தடுப்பூசி என்று அரசு சார்பில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சுயகட்டுப்பாடு ஒன்றே தீர்வு என்கிறார் இந்த மருத்துவ மாணவி. அனைவரும் முகக்கவசம் அணிவதோடு ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பது அவசியம் என்றும் மாணவி திரணி வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: