சபாஷ் சரியான பதிலடி நாங்க தானே துட்டு தர்றோம் அப்ப... உங்க போட்டோ எதுக்கு?: தடுப்பூசி சான்றிதழில் மோடி புகைப்படம் ‘கட்’

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குகிறது. ஆனால் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான  தடுப்பூசியை மாநில அரசுகளே தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 18-44 வயதுக்கு உட்பட்டவர்களின் தடுப்பூசி செலவை மாநில அரசுகளே ஏற்றுள்ளன.

இந்நிலையில், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 18-44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக அம்மாநில முதல்வர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு  தரப்படுகின்றன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘‘18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் தானே செலவு செய்து தடுப்பூசி போடுகின்றன. ஏற்கனவே கொரோனாவால் மாநில அரசுகள் நிதிச்சுமையில் இருக்கும்  நிலையிலும் கூட பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கி தடுப்பூசி செலவை ஏற்றுள்ளன.

அப்படியிருக்கையில் தடுப்பூசி சான்றிதழில் மட்டும் ஏன் பிரதமரின் புகைப்படத்தை போட வேண்டும்’’ என கேள்வி எழுப்புகின்றனர். முதல் டோஸ் போட்டவர்களுக்கு மாநில அரசு தரப்பில் தரப்படும் இடைக்கால தடுப்பூசி சான்றிதழில் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் புகைப்படங்கள் அச்சிட்டு தரப்படுகின்றன. ஆனாலும், இறுதி சான்றிதழ் கோவின் ஆப் மூலம் வழங்கப்படுவதால் அதில் பிரதமர் மோடியின் புகைப்படமே இடம் பெற்றிருக்கும்.

Related Stories: