சட்டப்படிப்பில் பிஎச்டி படிப்பதற்கு 2 ஆண்டு எல்எல்எம் தகுதி விதியை ரத்து செய்யக்கோரி வழக்கு: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்குஉயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரவாயலை சேர்ந்த சுகன்யா ஜெப சரோஜினி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:சட்டப்படிப்பில் பி.எச்.டி படிப்பதற்கான விண்ணப்பங்களை வரவேற்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கடந்த 10ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், 2 ஆண்டுகள் முதுநிலை சட்ட படிப்பை முடித்தவர்கள்தான் பி.எச்.டி படிப்புக்கு சேர முடியும் என்று பல்கலைக்கழகம் விதி வகுத்துள்ளது. கடந்த 2012ல் பல்கலைக்கழக மானியக்குழு 2 ஆண்டுகள் முதுநிலை படிப்பை மாற்றிவிட்டு ஒரு ஆண்டு முதுநிலை படிப்பை கொண்டுவந்து அறிவித்தது. இதையடுத்து, பல சட்டக் கல்லூரிகள் 2 ஆண்டு முதுநிலை படிப்பை மாற்றி ஒரு ஆண்டாக நடத்தி வருகின்றன.இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாக டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகள் முதுநிலை படிப்புதான் பி.எச்.டி படிப்புக்கு தகுதியானது என்று அறிவித்துள்ளது.

எனவே, டாக்டர்  அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் விதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். எனக்கு பி.எச்.டி படிப்பிற்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்குமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நிர்மல்குமார் மோகன்தாஸ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: