பத்திரிகையில் பெயர் இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் திருமணத்துக்கான இ-பதிவில் கடும் கட்டுப்பாடு: விருந்தினர் அனைவருக்கும் ஒரே பதிவு

* ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு இருந்தால் கிரிமினல் நடவடிக்கை

* தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருமண நிகழ்வுக்கு செல்வதற்கு இ-பதிவு பெற கடும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ-பதிவு செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு இருந்தால் கிரிமினல் நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் வேகமெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு முறை கடந்த 17ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு, முதியோர் தேவை போன்றவற்றிற்கு https://eregister.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பதிவு செய்து பயணிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதில், திருமணத்துக்கு செல்வதாக கூறி பொதுமக்கள் பலர் இ-பதிவு செய்து பயணிக்கின்றனர். குறிப்பாக, ஒரு திருமண பத்திரிகையை வைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் இ-பதிவு செய்து பயணம் செய்வதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திருமணத்துக்கு இ-பதிவு செய்வது தற்காலிகமாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன. மேலும், திருமணத்துக்கு இ-பதிவு கடும் கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி,  திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் பெயர் பத்திரிகையில் இருந்தால் மட்டுமே இ-பதிவு ெசய்ய முடியும் எனவும், திருமணத்துக்கு செல்வோர் ஒரே பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கு இ-பதிவு செய்யும் புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவிலேயே அனைத்து வண்டிகளுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள நபர் (விண்ணப்பதாரர் - மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர்) ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் பத்திரிகையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ தொற்று நோய் சட்ட விதிகள் 1897 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்ட விதிகள் 2005 இன் படி (சிவில் மற்றும் கிரிமினல்) நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அரசாங்க அடையாளம் (ஆதார், ரேஷன், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட்) தயாராக வைத்துக்கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: