உ.பி. அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் உயிரிழப்பு!: பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!!

லக்னோ: உத்திரப்பிரதேச அரசின் வருவாய்த்துறை அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகரின் சர்துவால் சட்டமன்ற தொகுதியில் இருந்து பாஜக சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜய் காஷ்யப். 52 வயதான இவர், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில், வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக இருந்து வந்தார். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விஜய் காஷ்யப்பின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. 

உத்திரப்பிரதேசத்தை பொறுத்தமட்டில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், கொரோனாவின் 3ம் அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு அடுத்தடுத்து 5 பாஜக எம்.எல்.ஏக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: