ஏழுமலையான் கோயில் முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பணக்குவியல்: விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றி ஓராண்டுக்கு முன் இறந்த முன்னாள் ஊழியரின் வீட்டில் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை தேவஸ்தான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சீனிவாச்சாரி. கோயில் ஊழியர் என்ற அடிப்படையில் இவர், தங்கிக்கொள்ள திருப்பதி சேஷாசலம் நகரில் தேவஸ்தானம் சார்பில் இவருக்கு வீடு வழங்கப்பட்டது. இதற்கிடையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்நிலையில் சீனிவாச்சாரி, ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் வசித்து வந்த வீடு பூட்டியிருந்தது. சீனிவாச்சாரிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தேவஸ்தானம் வழங்கிய அந்த வீட்டை மீண்டும் கையகப்படுத்த முடிவு செய்தது.

இதையொட்டி நேற்று தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், சீனிவாச்சாரி வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சில மூட்டைகள் கிடந்தது. அதில் ஒரு மூட்டையில் வைக்கப்பட்ட டிரங்க் பெட்டியை திறந்தபோது பணக்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வந்து எண்ணியபோது சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேவஸ்தான உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தேவஸ்தான அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>