கோவையில் புது முயற்சி!: ஓடாமல் நிற்கும் கல்லூரி பஸ்கள் உயிர் காக்கும் வாகனங்களாக மாற்றம்.. மக்கள் வரவேற்பு..!!

கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கால் ஓடாமல் முடங்கியுள்ள கல்லூரி பேருந்துகளை உயிர் காக்கும் வாகனங்களாக மாற்றியுள்ளனர். ஒவ்வொரு பேருந்திலும் தலா 12 பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சைகள் அளிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக ஓடாமல் முடங்கியுள்ள கல்லூரி பேருந்துகளை உயிர் காக்கும் வாகனங்களாக மாற்றி சேவையாற்ற முன்வந்துள்ளது கோவை தொழில் முனைவோர் அமைப்பு. 

முதற்கட்டமாக கோவையில் உள்ள கே.ஜி. கல்லூரியில் இருந்து 2 பேருந்துகளை பெற்றுள்ள அவர்கள், ஒவ்வொரு பேருந்திலும் தலா 12 பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கும் வசதிகளை செய்துள்ளனர். 20 இருக்கைகள் கொண்ட பேருந்தின் கடைசி பகுதியில் 6 சிலிண்டர்களை பொருத்தியிருக்கின்றனர். அங்கிருந்து இருக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுத்திருக்கின்றனர். பேருந்தின் வலது மற்றும் இடதுபுறத்தில் தலா 6 பேர் வீதம் ஒரு பேருந்தில் 12 பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க முடியும். ஆக்சிஜன் அளவு 90 விழுக்காடுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆக்சிஜன் பேருந்தில் சிகிச்சைகள் அளிக்க முன்னுரிமை தரப்படும். 

அவர்களுக்கு உதவுவதற்காக பேருந்திலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது 2 பேருந்துகள் ஆக்சிஜன் பேரூந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றின் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும் மற்றொன்று கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் கொடுக்க இருப்பதாக கோவை தொழில் முனைவோர் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

மூச்சுத்திணறலுடன் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மணிக்கணக்கில் ஆம்புலன்ஸிலேயே காத்திருப்பதால் உயிரிழக்க நேரிடுவதாக புகார்கள் எழுகின்றன. அதற்கு ஆக்சிஜன் பேருந்து திட்டம் நல்ல தீர்வை தரும். தமிழக அரசின் போக்குவரத்து கழக பேருந்துகளும் கொரோனா ஊரடங்கால் முடங்கி உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட அளவு பேருந்தையாவது இதுபோன்று ஆக்சிஜன் பேரூந்துகளாக மாற்றினால் மக்கள் பயன்பெறுவர் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.  

Related Stories: