களக்காடு பகுதியில் விலை வீழ்ச்சியால் மரங்களிலேயே பழுத்து வீணாகும் மாங்காய்கள்: விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு

களக்காடு: முழு ஊரடங்கால் மாங்காய்கள் விலை வீழ்ச்சியடைந்ததால், களக்காட்டில் மரங்களிலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு சுற்றுவட்டார பகுதியில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். விவசாயத்தை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக போதிய லாபம் இன்றி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். அதேபோல் தற்போது மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். களக்காடு, மாவடி, சிதம்பராபுரம், மலையடிபுதூர், திருக்குறுங்குடி பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மாந்தோப்புகள் அமைந்துள்ளது. இங்கு நீலம், கலர் சேலம், பெங்களூரான், பங்கனப்பள்ளி, கலப்பாடு, அல்போன்சா, ஒட்டு, மல்கோவா உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த மாங்காய்கள் விளைவிக்கப்படுகிறது. பொதுவாக மே மாதம் மாங்காய்கள் சீசன் தொடங்கும்.

வியாபாரிகள் விவசாயிகளிடம் மொத்தமாக விலை நிர்ணயம் செய்து மாங்காய்களை கொள்முதல் செய்கின்றனர்.

பின்னர் வெளியூர்களுக்கு கொண்டு சென்று சந்தைகளில் மாங்காய்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளுக்கும் மாங்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி பிரச்னைகளால் வெளிநாட்டு ஏற்றுமதி நிறுத்தப்பட்டு விட்டது. இந்தாண்டும் மே மாத தொடக்கத்தில் சீசன் தொடங்கிய போது மாங்காய்கள் விலை 1 கிலோ ரூ.70ல் இருந்து ரூ.100 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளும், மாங்காய் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த சில நாட்களில் மாங்காய்கள் விலை இறங்குமுகமானது. இதனிடையே கொரோனா 2ம் கட்ட பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்களை அமல்படுத்தி உள்ளது. இதையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாங்காய்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ மாங்காய்கள் ரூ.5ல் இருந்து 10 வரை மட்டுமே விற்பனையாகிறது. விலை சரிந்ததால் வியாபாரிகள் மாங்காய்களை பறிக்க முன் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து மாங்காய்கள் மரங்களிலேயே பழுத்து, அழுகி வீணாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள மாங்காய்கள் அழுகி கீழே விழுந்து மாந்தோப்புகளில் சிதறி கிடக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வியாபாரிகளும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். பழக்கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படுவதால் பழக்கடைகளிலும் அதிகளவில் மாம்பழங்கள் வாங்குவதில்லை என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே மாங்காய்கள் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், அதை நம்பியுள்ள வியாபாரிகளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இரவு 9 மணி வரை பழக்கடைகளை திறக்க அரசு தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலுக்கே மோசம்

நாகர்கோவிலை சேர்ந்த வியாபாரி முருகேசன் கூறும்போது, சமையலுக்கு கூட மாங்காய்களை வாங்க மறுக்கின்றனர். மரங்களில் இருந்து மாங்காய்களை பறித்து, அவைகளை லாரிகள் மூலம் வெளியூர் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். இதற்கு செலவாகும் செலவு கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. நஷ்டம்தான் ஏற்படுகிறது. முதலுக்கே மோசம் என்றால் எப்படி மாங்காய்களை பறிப்பது? என்று கவலையுடன் கூறினார்

2 ஆண்டுகளாக இழப்பு

திருக்குறுங்குடியை சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு கூறுகையில், கடந்த ஆண்டும் கொரோனா பரவலை முன்னிட்டு மாங்காய்கள் அடிமாட்டு விலைக்கு சென்றது. தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அழுகி வீணான மாம்பழங்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இவைகளை இப்படியே போட்டு விட முடியாது, கண்டிப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு அப்புறப்படுத்த தொழிலாளர்களை ஈடுபடுத்த சம்பளம் வழங்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனவே அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

Related Stories:

>