செங்கம் அருகே ஊரடங்கு காலத்திலும் செய்யாற்றில் இரவு, பகலாக மணல் கொள்ளை-நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

செங்கம் : செங்கம் அருகே செய்யாறில் இரவு, பகலாக நடக்கும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி வழியாக செல்லும் செய்யாற்றின் கரையோரம் கிணறுகள் வெட்டப்பட்டு, சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள விவசாய கிணறுகளை நம்பி விவசாயமும் நடந்து வருகிறது.

தற்போது, கோடை வெயில் காரணமாக தண்ணீர் இன்றி செய்யாறு வறண்டு காணப்படும் நிலையில், செங்கம் அடுத்த குப்பநத்தம், கொட்டாவூர், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, மண்மலை, கரியமங்கலம், கொட்டகுளம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக ஆற்று மணல் அள்ளப்படுகிறது.

பின்னர், அந்த மணலை சல்லடை வைத்து சலித்து, பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது.  கொரோனா ஊரடங்கு காரணமாக போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையினரும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனை சாதமாக பயன்படுத்தி கொண்டு மணல் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இந்த மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாறாக ஆற்றில் மணல் திட்டுகள் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் பஞ்சமும் ஏற்படாது. விவசாய பணிகளும் தடையின்றி நடக்கும்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி, செங்கம் பகுதிவழியாக செல்லும்  செய்யாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் குழுவை அமைத்து, மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>