மீண்டும் புதிய உச்சம் புதுவையில் சிறுமி, இளம்பெண் உட்பட 30 பேர் கொரோனாவுக்கு பலி-ஒரே நாளில் 2,049 பேருக்கு தொற்று

புதுச்சேரி : புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று 2,049 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 வயது சிறுமி, 25 வயது இளம்பெண் உட்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாநிலத்தில் 9,058 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி -  1,590, காரைக்கால் - 285, ஏனாம் - 125, மாகே - 49 பேர் என மொத்தம் 2,049 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 21 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாமில் 3 பேர் என ஒரே நாளில் அதிகபட்சமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் ஆவர்.

புதுச்சேரியில் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, 58 வயது ஆண், திருவண்டார்கோவிலை சேர்ந்த 14 வயது சிறுமி, வில்லியனூர் பெரியபேட் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், அய்யனார் நகரை சேர்ந்த 52 வயது ஆண், கொசப்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண், அரியாங்குப்பத்தை சேர்ந்த 43 வயது பெண், முதலியார்பேட்டையை சேர்ந்த 84 வயது முதியவர், மகாவீர் நகரை சேர்ந்த 62  வயது முதியவர், பாகூரை சேர்ந்த 81 வயது முதியவர், வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்த 82 வயது மூதாட்டி, வீமன் நகரை சேர்ந்த 55 வயது ஆண், கீழுரை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகிய 13 பேரும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உயிரிழந்துள்ளனர்.

கொம்பாக்கத்தை சேர்ந்த 58 வயது பெண் புதுவை அரசு பொது மருத்துவமனையிலும், நடேசன் நகரை சேர்ந்த 45 வயது ஆண், சண்முகாபுரத்தை சேர்ந்த 67 வயது முதியவர், உருளையன்பேட்டையை சேர்ந்த 78 வயது மூதாட்டி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 85 வயது முதியவர் ஆகிய 4 பேரும் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியிலும், சுப்பையா நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி, டி கார்டே பகுதியை சேர்ந்த 84 வயது மூதாட்டி, ரெயின்போ நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஆகிய 3 பேரும் ஜிப்மரிலும் பலியாகியுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேரு நகரை சேர்ந்த 52 வயது பெண், கோட்டுச்சேரியை சேர்ந்த 77 வயது மூதாட்டி, புதுநகரை சேர்ந்த 59 வயது முதியவர், விழிதியூரை சேர்ந்த 53 வயது பெண், டிஆர்.பட்டினத்தை சேர்ந்த 74 வயது மூதாட்டி, கோவில்பத்து ஊரை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகிய 6 பேரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும், ஏனாம் பிராந்தியத்தில் ராஜீவ் நகரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, அய்யனானா நகரை சேர்ந்த 60 வயது முதியவர், பெர்ரி சாலையை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகிய 3 பேரும் ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,018 ஆகவும், இறப்பு விகிதம் 1.36 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 75,025 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 518 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 354 பேரும், கோவிட் கேர் சென்டரில் 734 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 8,71,273 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 7,84,226 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2,18,622 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>