கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்கிறார் சோனு சூட்: பிரான்சில் இருந்து விரைவில் வருகின்றன

மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நடிகர் சோனு சூட் இறக்குமதி செய்கிறார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவிக்கரம் நீட்டி, நாடு முழுவதும் பாராட்டை பெற்றிருப்பவர் நடிகர் சோனு சூட். கொரோனா முதல் அலையின் போது, சொந்த ஊர் திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட பல புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் போக்குவரத்து வசதிகளை செய்து தந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். பலருக்கும் கேட்காமலேயே உதவிகளை செய்து வாழ்க்கையில் ஒளி ஏற்றினார்.  இந்நிலையில், அவர் அடுத்தகட்டமாக கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய உள்ளார். இந்த ஆலைகள், அதிக பாதிப்புள்ள மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிறுவப்பட உள்ளது.

இது குறித்து நடிகர் சோனு சூட் கூறுகையில், ‘‘ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் பலர் சிரமப்படுவதைப் பார்த்துள்ளோம். ஆக்சிஜன் சிலிண்டர்களை தற்போது வழங்கி வருகிறோம். ஆனாலும், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளால் மருத்துவமனைக்கு உதவுவதோடு, ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பவும் முடியும். இதனால் பெரிய பிரச்னை தீர்க்கப்படும். நேரம் தான் சவாலாக உள்ளது. இனிமேலும் நாம் உயிர்களை இழக்கக் கூடாது’’ என்றார். முதற்கட்டமாக அடுத்த 10-12 நாட்களில் ஒரு ஆக்சிஜன் ஆலை இந்தியாவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: