அளக்கரை கிராமத்தில் 2 குட்டிகளுடன் உலா வரும் கரடி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானை, கரடி, சிறுத்தை மற்றும் காட்டுமாடுகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன. இவைகள் குடிநீர் மற்றும் உணவு ேதடி அவ்வப்போது ஊருக்குள் வருகிறது. இதனால் விளைநிலங்கள் சேதம் அடைகின்றன. இதனிடையே மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நடக்கிறது. வன விலங்குகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வனத்துறையினர் காட்டு விலங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த முடியாமன் திணறி வருகின்றனர்.

பெரும்பாலான கிராமங்களில் தற்போது கரடிகளின் தொல்லை மிகவும் அதிகரித்துள்ளது. இவைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் தற்போது சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. குன்னூர் அருகேயுள்ள அளக்கரை பகுதியில் தற்போது மக்கள் வாழும் பகுதிக்குள் அடிக்கடி ஒரு கரடி 2 குட்டிகளுடன் வலம் வருகிறது. குட்டிகளுடன் உள்ளதால், யாரையாவது கண்டால் விரட்டி தாக்க முயற்சிக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குட்டியுடன் மக்கள் வாழும் பகுதிக்குள் உலாவரும் கரடியை வனத்திற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: