தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!

சென்னை : தினகரன் நாளிதழும், வேலூர் விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பிளஸ்-2 வகுப்பு முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் உயர்கல்வியில் எந்த மாதிரியான படிப்புகளை தேர்வு செய்து படிப்பது? என்பதில் குழப்பம் ஏற்படும். அந்த மாதிரியான குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், தினகரன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்து தேர்வு முடிவுக்காக ஆவலோடு காத்திருக்கும் மாணவ-மாணவிகளின் உயர்கல்வி கனவுக்கு ஒரு ஏணிப்படியாக தினகரன் நாளிதழும், வேலூர் விஐடியும் இணைந்து கல்வி கண்காட்சியை நடத்துகிறது.

இதில் அசோஷியேட் ஸ்பான்சராக ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவனம், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி ஆகியவை தினகரன் நாளிதழுடன் இணைந்து நடத்துகின்றன. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. 2 நாட்கள் நடத்தப்பட உள்ள இந்த கல்வி கண்காட்சியை மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். இந்த கண்காட்சியில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன மாதிரியான படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம்? என்பது பற்றிய தெளிவுகள் கிடைக்கும் வகையில் மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், விவசாயம், கேட்டரிங் மற்றும் இதர உயர்கல்வி துறைகள் அடங்கிய 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்று விளக்கங்களை தெரிவிக்க உள்ளனர்.

மேலும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் அரங்குகளுக்கு நேரடியாக சென்று பார்த்து பெற்றோரும், மாணவ-மாணவிகளும் தங்களுக்கான உயர்கல்வி குறித்த சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.இதுதவிர கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள் என்ன? எவ்வளவு கட்டணம் வரும்? கல்வி உதவித் தொகையை பெறுவது எப்படி? கட்டண சலுகைகள் எவ்வளவு கிடைக்கும்? என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.அதுமட்டுமல்லாமல், கிண்டி, கோயம்பேடு, போரூரில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கு இலவச பேருந்து வசதி சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 7299030525 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

The post தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!! appeared first on Dinakaran.

Related Stories: