4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

*முதல் நாளே கூட்டம் கூட்டமாக குவிந்தனர்

நெல்லை : கோடை வெயில் கொளுத்தும் நிலையில் 4 மாதங்களுக்கு பின்னர் வனத்துறை அனுமதி அளித்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அருவியில் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை செல்லும் வழியில் இயற்கை அழகுடன் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி.

நெல்லையில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணிமுத்தாறு அணையின் முகப்பு பகுதியில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து வனப்பகுதிக்குள் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மணிமுத்தாறு அருவி, தென்மாவட்டங்களில் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்கின்றது. நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் இந்த அருவியில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து சென்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் இடத்தின் தரைப்பகுதி, தடுப்புச்சுவர், தடுப்பு கம்பிகள் ஆகியவை சேதமடைந்தன. இதையடுத்து கடந்த 4 மாதங்களாக வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கச் செல்ல தனித்தனியாக தடுப்பு கம்பிகள், கான்கிரீட் சுவர், பெண்கள் உடை மாற்றும் அறை ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மராமத்துப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் பொதுமக்கள் காலை 8 முதல் மாலை 3 மணி வரை குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். ஏற்கனவே மணிமுத்துாறு அருவியில் குளிக்க அனுமதி குறித்த செய்தி தினகரனிலும் வெளியானது. இதனால் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் தற்போது கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தை விட அதிகமாக காலையிலேயே குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்த சுற்றுலாப்பயணிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மணிமுத்தாறு அருவிக்கு செல்ல கார், வேனுக்கு ரூ.50, பெரியவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.40, 5 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.30ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, கொரோனா காலத்திற்கு முந்தைய ஆண்டுகளின் ஏப்ரல், மே கோடை விடுமுறை காலங்களில் பிரதான மணிமுத்தாறு அருவியில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் குளித்து மகிழ்ந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் அருவிக்கு செல்ல வனத்துறையின் சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். குறிப்பாக உணவு வகைகள் கொண்டு சென்று சாப்பிடக் கூடாது என்பதாகும். இதனால் குளித்தவுடன் பசித்ததால் சுற்றுலாப்பயணிகள் சாப்பிட டீ, வடை கூட கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அங்கிருந்து கீழே வந்து சாப்பிடுவதற்கும் வசதியான இடமில்லை. மணிமுத்தாறு அணையின் பூங்காவும் எவ்வித பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து சாப்பிடுவதற்கோ, இளைப்பாறவோ முடியவில்லை, எனவே தென் மாவட்டத்தில் மிக சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் மணிமுத்தாறு அணை மற்றும் அருவிகளில் அடிப்படை வசதிகளை இன்னும் மேம்படுத்தினால் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ, பைக் அனுமதியில்லை

மணிமுத்தாறு அருவிக்கு ஆட்டோ, பைக்குகளில் செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை என்பதால் உள்ளூர் மற்றும் அருகாமையில் உள்ள பகுதி மக்கள் காரில் செல்ல வசதியின்றியும், அரசு பஸ்கள் அருவிக்கு இயக்கப்படாததாலும் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்று குளிக்க முடியாததால் மிகவும் வேதனை அடைகின்றனர். நேற்றைய நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89.65 அடியாக உள்ளது.

The post 4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: