கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி: தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு…தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ரூ.275 கோடி மட்டுமே வெள்ள நிவாரணம்

தமிழ்நாட்டுக்கு மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.275 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் கோரியிருந்தது.

தமிழ்நாடு கேட்டது ரூ.38,000கோடி, வந்தது ரூ.275கோடி

ரூ.38,000 கோடியை வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில் வெறும் ரூ.275 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழ்நாடு அரசு பலமுறை ஒன்றிய அரசை வலியுறுத்தி இருந்தது. ரூ.38,000 கோடியை விடுவிக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வலியுறுத்தியிருந்தனர்.

கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணம் விடுவிப்பு

கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் ரூ.3,454 கோடி வறட்சி நிவாரணமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் கோரி காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் வறட்சி நிவாரணம் விடுவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவுவதால் நிவாரணப் பணிகளுக்காக ரூ.35,162 கோடி கோரியிருந்தது கர்நாடக அரசு. உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு அணுகிய நிலையில் வறட்சி நிவாரண நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் ஒதுக்காததை கண்டித்து சொம்பை காட்டி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்திருந்தார். கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என்று தகவல் பரவிய நிலையில் நிவாரணம் விடுவிக்கப்பட்டது. மேலும், கர்நாடகத்தில் பாஜக பின்னடைவை சந்தித்ததால் வறட்சி நிவாரணம் விடுக்கப்பட்டுள்ளதாக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

பாஜகவுக்கு தமிழ்நாடு மீது இருப்பது கோபம் அல்ல; வன்மம், தீராத வன்மம் என்று சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்வதாக புகார் தெரிவித்துவருகின்றனர்.

The post கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி: தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு…தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: