மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன் பைனலில் ஆஷ்லி அதிர்ச்சி

மாட்ரிட்,: ஸ்பெயினில் நடந்த மியூச்சுவா மாட்ரிட் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.  பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தியுடன் (ஆஸி.) மோதிய சபலென்கா (5வது ரேங்க்), அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். ஆஷ்லியின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த அவர் 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.  இதைத் தொடர்ந்து, 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஆஷ்லி 6-3 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. இதனால், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், சபலென்கா 6-0, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார்.

இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் 2வது மற்றும் தனது 10வது டபுள்யு.டி.ஏ. சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சபலென்கா, களிமண் தரை மைதானங்களில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 2019 ரோம் தொடரில் இருந்து களிமண் தரை மைதானங்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்த ஆஷ்லி, மாட்ரிட் ஓபன் பைனலில் அதிர்ச்சி தோல்வியுடன் 2வது இடம் பிடித்தார்.

 

அலெக்சாண்டர் முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தகுதி பெற்றார். அரை இறுதியில் ஆஸ்திரியா நட்சத்திரம் டொமினிக் தீமுடன் மோதிய அலெக்சாண்டர் 6-3, 6-4 என நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இவர் கால் இறுதியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலை வீழ்த்தியிருந்தார். இறுதிப் போட்டியில் மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) - அலெக்சாண்டர் மோதுகின்றனர்.

Related Stories: