மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்

புதுடெல்லி: கொரோனா பேரிடரைக் கையாள்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.   மாநிலங்களவையின் எதிர்க்கட்சித்தலைவரான காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா போராட்டத்தில் மத்திய அரசு தனது பொறுப்புகளை கைவிட்டதால், சாதாரண குடிமக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். சிகிச்சைக்காக சேமிப்பு, நகை, நிலம் போன்றவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்த்து போராடுவதில் ஒருமித்த, கூட்டு முயற்சி தேவை. எனவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தொற்றுநோய்ப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான மாதிரி திட்டத்தை வகுக்க வேண்டும்.

பட்ஜெட்டில் ஒதுக்கிய 35 ஆயிரம் கோடியை பயன்படுத்தி எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்ய வேண்டும். நிலைமையை கருத்தில் கொண்டு மருந்து பொருட்கள், தடுப்பூசிகள் போன்றவற்றுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்.  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிவாரண பொருட்களை விநியோகம் செய்வதற்கான பணிகளில் புலம்பெயர் தொழிலாளிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தேவை ஆக்சிஜன்; பிரதமர் வீடு அல்ல

கொரோனாவின் கோரதாண்டவத்திலும், புதிய நாடாளுமன்றம், பிரதமரின் வீடு உள்ளிட்டவற்றை கட்டும் மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய அரசு நிறுத்தவில்லை. பிரதமரின் வீடு கட்டும் பணியை அத்தியாவசிய பணிகள் பட்டியலில் சேர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது டிவிட்டரில், ‘‘நாட்டிற்கு தேவை ஆக்சிஜன், பிரதமரின் வீடு அல்ல’’ என கூறி ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், கிராமங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக, ‘‘நகரங்களை தொடர்ந்து, கிராமங்களும் இனி கடவுளையே நம்பி உள்ளன’’ என கூறி உள்ளார்.   

Related Stories: