கொரோனா 2வது அலை பரவலை தடுக்க தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு: ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு: தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட எல்லைகள் மூடல்

* அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி.

* பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.

* தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்லலாம்.

சென்னை: கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 15 நாள் முழு ஊரடங்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி இன்று காலை 4 மணிக்கு தொடங்கியது. அனுமதி அளிக்கப்பட்ட கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டது. ஊரடங்கு பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் வரும் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை அதாவது 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

இந்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சுகி, ஷோமோட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. நியாய விலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மற்ற எந்த கடைகளுக்கும் திறக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அத்தியாவசிய துறைகளான, தலைமை செயலகம்,

மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை.

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்கவில்லை. தனியார், அரசு பேருந்து , வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். முழு ஊரடங்கின்போது, ரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதி அளிக்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட்டது. முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் டிஜிபி திரிபாதி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் ஆகியோர் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் 250 இடங்களுக்கு மேல் சோதனை சாவடிகள் அனைத்து வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் 1 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அனைத்து சாலைகளும் தடுப்புகள் அமைத்து போலீசார் மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 சென்னை மாநகரை பொருத்தவரை போலீஸ் கமிஷனர் ஷங்கர் ஜிவால் உத்தரவுப்படி சிறிய மற்றும் பெரிய மேம்பாலங்கள் மற்றும் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஈவெரா நெடுஞ்சாலை, வடபழனி 100 அடி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை என முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. சென்னையில் பாதுகாப்பு பணியில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 12 துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: