தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல்: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வர கூடிய சூழ்நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்கு ஒரு மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெளி நோயாளிகளுக்கு அனுமதிக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கொரோனா தொற்றிற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்றிற்காக பயன்படுத்த கூடிய ரெம்டெசிவிர் மருந்து சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. இதனை அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று அவசர கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதுபோன்ற நோய்தொற்று காலத்தில் தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை எந்தவித கருத்தில் கொள்ளாமல் தாங்களாகவே கட்டணத்தை நிர்ணயம் செய்கின்றனர். இந்த கட்டணம் 10 லட்சம், 20 லட்சம் என்று பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் தான் தற்போது கொரோனா தொற்றை விட விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா நோயாளிகளிடம் அதிகப்படியாக பணம் பெறுவது என்பது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக உள்ளது. அதேநேரத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்து இதுதொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய மாநில அரசு என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளனர் என்று பல்வேறு விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர். மேலும் இந்த வழக்கில் விளக்கமளிப்பதற்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories:

>