கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கோட்டையாக்கிய விஜய் வசந்த்

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட விஜய் வசந்த் ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அத்தொகுதியை காங்கிரஸ் கோட்டையாக்கியுள்ளார். கன்னியாகுமரியில் தனது தந்தை வசந்தகுமார் கண்ட கனவை நனவாக்குவதே கடமை என்று கூறி வந்த விஜய் வசந்த், தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளதால், அதன் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் தொகுதி மக்களை நெருங்க உதவியது.

2019 மக்களவை தேர்தலில் முக்கிய போட்டியாளராக இருந்த பாஜ முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை வசந்தகுமார் தோல்வியடைய செய்தார். இப்போதும் அவரது மகனான விஜய் வசந்த்திடமும் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்திருப்பது பாஜவுக்கு பெருத்த அடியாக உள்ளது. இந்த வெற்றி மூலம் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாறியுள்ளது. பாஜக சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளை பெற்றார். இதனால், விஜய் வசந்த் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: