தலைமை குற்றவியல் வக்கீல் ராஜினாமா அலுவலக மேலாளரிடம் காரை ஒப்படைத்தார்: கூடுதல் அட்வகேட் ஜெனரல்களும் கடிதம் அனுப்பினர்

சென்னை: சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து அரசு வக்கீல்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து அவர் பயன்படுத்தி வந்த அரசு வாகனத்தையும் குற்றவியல் அலுவலக மேலாளரிடம் ஒப்படைத்தார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வி.எஸ்.சேதுராமன், பி.எச்.அர்விந்த் பாண்டியன், எஸ்டிஎஸ் மூர்த்தி, எஸ்.ஆர்.ராஜகோபால், மாநில அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், கூடுதல் குற்றவியல் வக்கீல்கள் முகமது ரியாஸ், கார்த்திகேயன் உள்ளிட்டோரும் தங்களது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல், அரசு சிறப்பு வக்கீல்கள், அரசு வக்கீல்கள் உள்ளிட்ட வக்கீல்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை தலைமை செயலாளர் மற்றும் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நேற்று அவர்கள் தங்கள் பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலக மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றனர்.

Related Stories: