தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பில்லை என கைவிரிப்பு; ரெம்டெசிவிர் மருந்துக்கு செயற்கை தட்டுப்பாடு

* நோயாளிகளின் உறவினர்கள் மருந்துக்காக அலையும் அவலம்

* கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக போடும் நாடகம் என குற்றச்சாட்டு

* தட்டுப்பாடு என்றால் அரசிடம் கேட்காமல் இருப்பது ஏன் என கேள்வி

சென்னை:தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால்  பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. முதல் அலையை காட்டிலும் 2வது  அலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் வீரியமிக்க கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம்  இருப்பதால் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதற்கு வீரியமிக்க கொரோனா  நுரையீரல் தொற்று ஏற்படுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதே காரணம் என சொல்லப்படுகிறது.

எனவே, தான்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பல்வேறு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டாலும், மூச்சு  திணறால் பாதிப்பு ஏற்படாமல் காக்க ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து செலுத்தி வருகிறது. இந்த மருந்து நோயாளிகளுக்கு 6  டோஸ்  போட வேண்டும். இதன் மூலம் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும். அவ்வளவு  முக்கியத்துவம் வாய்ந்த ரெம்டெசிவிர் மருந்துக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் 494 தனியார் மருத்துவமனைகளில் 95 சதவீத்துக்கும் மேலான  மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இல்லை என்று கூறுகின்றனர். மேலும், நோயாளிகளின் உறவினர்களை  ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வருமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

இது போன்ற பெருந்தொற்று காலகட்டத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அந்தெந்த மாவட்ட சுகாதாரத்துறை  அலுவலரிடம் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் இல்லாத சூழ்நிலையில் கேட்டு பெற்று கொள்ளலாம். ஆனால்,  மருத்துவமனை நிர்வாகம் அதை செய்யாமல் நோயாளிகளின் உறவினர்களை மருந்துகளை வாங்கி வருமாறு கூறி  அனுப்புகின்றனர்.இந்த மருந்து தட்டுபாட்டை  பயன்படுத்தி, ஒரு சில  மருந்து கடைகளில் பதுக்கி வைத்து, எம்ஆர்பி விலையில் ₹4  ஆயிரம் மதிப்பிலான மருந்தை  ₹20 ஆயிரம் வரை  கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும், ஒரு சில தனியார் மருத்துவமனைகளும் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள், ஆபத்தான  நிலையில் இருக்கும் நோயாளிகளை ரெம்டெசிவர் மருந்தை போட வேண்டுமென்றால்  ஒரு டோஸ் ரூ.40 ஆயிரம் வரை  கட்டணம் செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கின்றனர்.  சில தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் இல்லாத நிலையில் அவர்கள் அரசிடம் கேட்டு பெறாமல்  உறவினர்களை வாங்கி வர சொல்கின்றனர். எந்தவொரு மருத்துவமனை நிர்வாகமும் மருந்து இல்லை என்றால், அரசிடம்  தான் கேட்க வேண்டும். மாறாக, நோயாளிகளின் உறவினர்களை அலைக்கழிக்க கூடாது. ஆனால்,  நோயாளிகளின்  உறவினர்கள்  அலைகழிக்கும் நிலை தான் உள்ளன.

அவர்கள் வேறுவழியின்றி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள  மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் மருந்து பெற காத்துக்கிடந்து வாங்கி செல்லும் நிலை தான் உள்ளது.  இங்கு வெறும் ரூ.1568 மதிப்பில் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்கும் என்பதால் மாநிலம் முழுவதும் கொரோனா வார்டாக  மாற்றப்பட்ட 138 அரசு மருத்துவமனைகளில்  ரெம்டெசிவர் மருந்து கையிருப்பில் உள்ளன. ஆனால், தனியார்  மருத்துவமனைகளில் மட்டும் எப்படி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் நோயாளிகளின் உறவினர்கள்  மத்தியில் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் செயற்கை தட்டுபாடு ஏற்படுத்தி கூடுதல் கட்டணம் வாங்க வேண்டும் என்பதற்காக இது போன்ற  மோசடியில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டு இருப்பதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் சந்தேகத்தை கிளப்பி  இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: