கோயம்பேட்டில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 300 கடைகள்: சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு

சென்னை: கோயம்பேடு மார்கெட்டில் தினமும் 400 பேருக்கு அதிகமாக கொரோனா தொற்று பாதித்து வருகிறது. இதில், கொரோனா தொற்றை குறைக்க சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைய உள்ள ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் 300 காய்கறி கடைகள் அமைக்க சிஎம்டிஏ நிர்வாகம் நேற்று காலை முடிவு செய்தது. இதில், 500 வாகனங்கள் நிறுத்தவும் இட வசதிகள் உள்ளது. மேலும், 12 நடைமேடைகள் மற்றும் 2 பிளாக் கழிப்பறை வசதிகளும் உள்ளது. இதுகுறித்து சிஎம்டிஏ நிர்வாகத்தினர் கூறுகையில், “கொரோனாவுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் தினந்தோறும் 400க்கும் மேற்பட்டோர் பாதித்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த கோயம்பேடு மார்க்கெட்டை கிளாம்பாக்கம் பகுதிக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது.

கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், தற்போது கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதில் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிவாசிகள் வரவேற்றுள்ளனர். மேலும், இந்த பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைத்தால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்காமல் இருக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசு விதிக்கும் அனைத்து கட்டுபாடுகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் 300 காய்கறி கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ள சிஎம்டிஏ ஒவ்வொரு கடைக்கும் 5 அடி இடைவெளியுடன் அமைக்க திட்டமிட்டுள்ளது,” என தெரிவித்தனர்.

Related Stories: