இட நெருக்கடியால் தவிக்கும் டெல்லி அரசுக்கு உதவி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுகிறது உச்ச நீதிமன்றம்: முன்கூட்டியே கோடை விடுமுறை

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருப்பதால், உச்ச நீதிமன்ற வளாகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த, தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், பலியும் அதிகமாகி வருவதால், உச்ச நீதிமன்றமும் கவலை அடைந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் இது உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் அதிகளவில் இறக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், சிகிச்சை அளிப்பதற்கு போதிய இடவசதிகளும் இல்லாமல் டெல்லி அரசு தவிக்கிறது. இந்த இக்கட்டான நிலையில், மக்களுக்கு உதவி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது. தனது நீதிமன்ற வளாகத்தை கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றுவது பற்றி, வக்கீல்கள் சங்கங்களுடன் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அதில், உச்ச நீதிமன்ற கட்டிடத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற பதிவாளர் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் 2வது அலை கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக, டெல்லியின் நிலை மிக மோசமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையை இந்தாண்டு ஒரு வாரம் முன்னதாக தொடங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு தலைமை நீதிபதியிடம் இருந்தும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை காலத்தில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, படுக்கை வசதிகள், பரிசோதனைகள் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள டெல்லி அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றால் படுக்கை வசதி இல்லாமல் தவிக்கும் ஏராளமானோர் இதன் மூலம் பயன் அடைவார்கள். இதற்காக, இந்தாண்டு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையை வரும் மே 7ம் தேதி முதலே துவங்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது, வழக்கமாக, உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை மே 14ம் தேதி முதல்தான் தொடங்கும். ஜூன் மாத இறுதியில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி டிவிட்டர் கணக்கு

போலீசில் ரமணா புகார்

டிவிட்டரில் தன்னுடைய பெயரில் போலி கணக்கு செயல்படுவதாக போலீசில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், ‘எந்த சமூக வலைதளத்திலும் நான் இல்லை. ஆனால், என்னுடைய பெயரில் போலியான டிவிட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சந்தான கவுடருக்கு அஞ்சலி

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் சந்தான கவுடர், நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்க இருந்த நீதிமன்ற அலுவல்கள் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. பின்னர், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மூத்த நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் எழுந்து நின்று அவருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பிறகு, நீதிபதி சந்தான கவுடருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நேற்றைய நீதிமன்ற அலுவல்கள் அனைத்தும் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

Related Stories: