நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் தாமதம்: ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையில் ஜல்லிகளால் விபத்து..!

கூடுவாஞ்சேரி: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது. 18 கிமீ தூரம் கொண்ட இந்த இடைப்பட்ட சாலைதான் ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை. இதில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் சாலை அமைக்க வனத்துறையினர் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர். இதனால், சாலை அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்காவிட்டால், ‘தேர்தலை புறக்கணிப்போம்’ என்று நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பொதுமக்கள் கூறினர். இதையடுத்து, தேர்தல் அறிவித்ததும் சுமார் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மேற்படி சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.

இதில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்காமல், நன்றாக இருக்கும் சாலைகளை கிளறி விட்டு சாலை அமைப்பதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வனத்துறைக்கு சொந்தமாக காட்டூரில் இருந்து அருங்கால் வரையில் 750 மீட்டரும், சின்ன அருங்காலில் இருந்து கீரப்பாக்கத்தில் உள்ள தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் வரையில் 250 மீட்டரும், நல்லம்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் கூட் சாலை வரையில் 2 கிமீ சாலை 18 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. சில ஆண்டுகல் குண்டும் குழியுமாக மாறியதால் தரமாக அமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. இதில் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் பழி போடுகின்றனர்.

சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றதும் வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட சாலையை சீரமைக்காமல், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் பகுதிகளில் நன்றாக இருந்த சாலையை கிளறிவிட்டு, ஜல்லி கற்களை கொட்டி வைத்தனர். மேலும் நல்லம்பாக்கத்தில் மட்டும் தேர்தல் நடைபெறும்போது தார் சாலை அமைத்தனர். அதுவும் ஏனோ தானோவென்று தரமற்ற முறையில் அமைத்ததால் மறுநாளே குண்டும் குழியுமாக மாறிவிட்டது. கீரப்பாக்கம் சாலையில் பரப்பப்பட்ட ஜல்லி கற்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயத்துடன் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்களால் புழுதி பறக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: