பாளை சிறையில் கைதி கொலை விவகாரம் உடலை பெற மறுத்து 3வது நாளாக போராட்டம்: அதிகாரிகள் மீது வழக்குபதிய வலியுறுத்தல்

நாங்குநேரி: நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்து மனோ (27). கொலை மிரட்டல் வழக்கில் இவர் உள்பட கைதான 4 பேருக்கும், பாளை சிறையில் உள்ள மற்றொரு பிரிவைச் சேர்ந்த கைதிகளுக்கும் மோதல் வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த முத்துமனோ, நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்தார். இது தொடர்பாக சிறை கைதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கிராம மக்கள் போராட்டத்தையடுத்து, பாளை மத்திய சிறை துணை ஜெயிலர் சிவன், உதவி ஜெயிலர்கள் சங்கரசுப்பு, கங்காதரன், தலைமை வார்டன்கள் வடிவேல் முருகையா, ஆனந்தராஜ், வார்டன் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக சிறைத் துறை டிஐஜி பழனி உத்தரவிட்டார்.

முத்து மனோவின் தந்தை பாபநாசம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் முத்துமனோ இறப்புக்கு நீதி கேட்டு நெல்லை அருகே தெற்கு மூன்றடைப்பில் கிராம மக்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையேற்க மறுத்த கிராம மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் முத்துமனோவின் சொந்த ஊரான வாகைக்குளத்தில் உள்ள மைதானத்தில் ஊர் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று மதியம் 12 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துமனோவின் தந்தை பாபநாசம் கூறுகையில், சிறை அதிகாரிகள், காவலர்கள், நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார். மேலும் 3வது நாளாக முத்துமனோவின் உடலை பெறவும் மறுத்துவிட்டனர்.

Related Stories: