கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை: கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. இந்த நிலையில் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில் வேலாயுதம்பாளையத்தில் இருக்கக்கூடிய ஒரு தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும் 2 அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும் கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்குஎண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித விலகல் பின்பற்ற முடியாது. கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் என்று அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதி வேண்டும் என்றும் மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிருமி நாசினி வைக்க வேண்டும், முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் அதுதொடர்பாக எந்த பதில் மனுவும் இல்லை என்று அவர் இந்த வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை ஒரு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று அவரது சார்பு வழக்கறிஞர் முறையிட்டார். ஆனால் தலைமை நீதிபதி இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

Related Stories: