முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 4.60 லட்சம் வழக்குகள் பதிவு!: தமிழக காவல்துறை தகவல்

சென்னை: முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை தரப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 8ம் தேதி முதல் நேற்று வரை 4 லட்சத்து 60 ஆயிரத்து 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத14,819 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் நேற்று ஒரே நாளில் ரூ.2,51,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை இன்னும் தீவிரப்படுத்த உள்ளது.

Related Stories: