மண்ணெண்ணெய் ‘பங்கை’ மூட முடிவா?18 ஆயிரம் லிட்டர் விநியோகம் 2 ஆயிரமாக குறைப்பு

சின்னாளபட்டி : சின்னாளபட்டி மண்ணெண்ணெய் பங்கில் மாதம் 18 ஆயிரம் லிட்டர் விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது 2 ஆயிரம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மண்ணெண்ணெய் பங்கை மூடுவதற்கு முடிவு செய்துள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே, அபிராமி கூட்டுறவு சங்க மண்ணெண்ணெய் பங்க் (எண்: டி.டி.487) உள்ளது. இந்த பங்க் மூலம் காந்தி கிராமம், அம்பாத்துரை ஊராட்சி மக்களுக்கு ரேசன் கார்டு ஒன்றுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய் திமுக ஆட்சியில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அதன் பின்னர் ஒரு சிலிண்டர் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு 3 லிட்டரும், எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போதைய அதிமுக அரசு ஒரு மாதம் அல்லது இரு மாதத்திற்கு ஒருமுறை 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மட்டும் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு முறையாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால், மீண்டும் கிராமப்புறங்களில் விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் பர்னர் அடுப்பு பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனால், தினசரி நூற்றுக்கணக்கானோர் சின்னாளபட்டி மண்ணெண்ணெய் பங்கிற்கு வந்து மண்ணெண்ணெய் இல்லாமல் திரும்பிச் செல்லும் அவலநிலை உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மண்ணெண்ணெய் பங்கிற்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>