இரவு நேர ஊரடங்கு அமல் பகல் நேரங்களில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரோடு : ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் வெளிமாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் நேரம் மாற்றப்பட்டு, இரவு நேரத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் அனைத்தும் பகல் நேரங்களிலேயே பெரும்பாலும் இயக்கப்பட்டது. இதனால், நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் எண்ணிக்கையை விட பஸ்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்பட்டது.

சென்னைக்கு பஸ் சேவை ரத்து: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு நேரங்களில் மட்டும் சென்னைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதில், அதிவிரைவு பஸ், ஏசி பஸ், சாதாரண பஸ் என 10க்கும் மேற்பட்ட பஸ்கள் இரவு நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் பயணிகள், ஈரோட்டில் இருந்து சேலம் சென்று, அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களில் செல்ல துவங்கியுள்ளனர்.

இது குறித்து ஈரோடு மண்டல அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:ஈரோடு மண்டலத்தில் 728 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பகலில் 80சதவீதமும், இரவு நேரத்தில் 20 சதவீதம் பஸ்களும் இயக்கப்பட்டு வந்தது. தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கினால், இன்று (நேற்று) முதல் பகல் நேரத்திலேயே 95சதவீதம் பஸ்களும் இயக்கப்பட்டது.

இதன் காரணமாக பஸ்கள் இயக்கப்படும் நேரங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் மாலை 4 மணிக்குப் பிறகும், திருச்சி செல்லும் பஸ்கள் மாலை 5 மணிக்குப் பிறகும் இயக்கப்பட மாட்டாது. ஈரோட்டில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் பஸ்சை பகல் நேரத்தில் மட்டுமே இயக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வந்த பஸ் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், மக்கள் ஈரோட்டில் இருந்து சேலம் சென்று அங்கிருந்து சென்னைக்கு பஸ்களில் செல்லலாம். சேலத்திலும் பகல் 2 மணிக்கு பிறகு சென்னைக்கு பஸ்கள் இயக்க வாய்ப்பு குறைவு. ஈரோட்டில் இருந்தும், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்தும் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லும் பஸ்கள் மாலை 4 மணிக்கு பிறகு இயக்கப்படமாட்டாது.

கோவை, கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல் போன்ற ஊர்களுக்கு இரவு 7 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படமாட்டது.    மேலும் மாலை 4 மணிக்கு மேல் நிறுத்தப்படும் தொலைதூர பஸ்கள், பயணிகளின் வருகையை பொருத்து, மாவட்டத்திற்குள்ளும், அருகாமையில் உள்ள மாவட்டத்திற்கும் இயக்கப்பட உள்ளது. வெளியூர், தொலைதூரம் செல்லும் பயணிகள் மாலை 3 மணிக்கு மேல் தங்களது பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றின் அச்சத்தின் காரணமாக இன்று (நேற்று) இயக்கப்பட்ட பஸ்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: