முஸ்லிம் நாட்டினருக்கு தடை கொஞ்சம் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்: பைடனுக்கு டிரம்ப் அறிவுரை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகித்த போது,  அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த, ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட பல தீவிரவாத ஆதரவு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்கா வருவதற்கு பயணத் தடை விதித்தார். ஆனால், புதிய அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்று கொண்ட ஜோ பைடன், இத்தடையை திரும்ப பெற்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக பைடனுக்கு  டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அதிபர் பைடன், இஸ்லாமிய தீவிரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க விரும்பினால், வெளிநாடுகளுக்கு பயணத் தடை விதித்ததை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நான் வெற்றிகரமாக அமல்படுத்திய அகதிகள் கட்டுப்பாடுகளுடன், குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களின் சோதனை முறைகளும் சேர்க்கப்பட வேண்டும். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

ஆன்லைன் மூலம் தீவிரவாதத்துக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுகிறது. தீவிரவாதத்தை நாட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டுமென்றால், எனது ஆட்சிக்கு முன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த அதே குடியுரிமை தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு சிறிது புத்திசாலித்தனத்துடன், பொது அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: