தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் பேராசிரியர்கள் விளக்கம்

திருவாரூர் : தமிழகத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இதன் தாக்குதல் தமிழகத்தில் முதன் முறையாக பொள்ளாச்சி பகுதிகளில் 2016ம் ஆண்டு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. வறண்ட காலநிலை நிலவும் கோடைகாலங்களில் இதன் தாக்குதல் பரவலாகக் காணப்படும். எனவே தென்னை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களை முறையாக கண்காணித்து பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

இது குறித்து, வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ், பேராசிரியர், தலைவர் குணசேகரன் மற்றும் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், சுருள் வெள்ளை ஈக்கள் வட்ட அல்லது சுருள் வடிவிலான மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்பரப்பில் தனித்தனியாக இட்டு மெழுகுப் பொருளால் ஒன்றிணைக்கப்பட்டு அரை வட்டமாக காட்சியளிக்கும். இதனைப் பார்ப்பதற்கு மாவுப்பூச்சி போன்றே தோற்றமளிப்பதால் விவசாயிகள் இதனை மாவுப்பூச்சி என்று தவறாக நினைத்து விடுகின்றனர்.

* சேதத்தின் அறிகுறி:

குஞ்சுகளானது இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இவை கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் இந்த ஈக்கள் வெளியேற்றப்படும் பசை போன்ற கழிவு திரவம் கீழ் காணப்படும். இலைகளின் மேல் படர்ந்து கேப்னோடியம் என்ற கரும்பூசணம் வளர ஏதுவாகின்றது. இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயல் இழந்து மகசூல் குறையும் வாய்ப்புள்ளது.

* தாக்கும் மற்ற மரப்பயிர்கள்:

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயானது 200க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழை, கொய்யா, சீதாப்பழம், மா, பலா போன்றவயும் இதன் தாக்குதலுக்கு உள்ளாகும். ஆனால், தென்னையை மிக அதிக அளவில் தாக்கும் தன்மை வாய்ந்தது.

* மேலாண்மை முறைகள்:

மஞ்சள் நிற ஓட்டுப்பொறிகள் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையது. எனவே 3 அடி நீளம் மற்றும் 1 அடி அகலமுடைய பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் தென்னை தோட்டங்களில் 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க தென்னை ஓலையின் அடிப்புறம் தண்ணீரை நன்கு பீய்ச்சியடிக்க வேண்டும். கிரைசோபாலா இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் இதனை ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணை 30மிலி அல்லது அசாடிராகன்டின் 1 சத மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி என்ற அளவில் தேவையான அளவு ஓட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் நன்குபடும்படி 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலை வேண்டும். இலைகளின் மேல் படரும் கரும்பூசணத்தை நிவர்த்தி செய்ய ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுக் கரைசலை தென்னை ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது கிரைசோபாலா இரை விழுங்கிகள், காக்சினெல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே உருவாக ஆரம்பிக்கும். அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது இயற்கை எதிரிகள் அழிந்து விடும். பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து இயற்கை எதிரிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது முக்கியமாகும்.

எனவே, தென்னை விவசாயிகள் அனைவரும் புதிய வகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து உரிய அவசர கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>