திருப்போரூர் அருகே கால்வாய் அமைக்காததால் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

திருப்போரூர்: சென்னையையொட்டியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி தெரு, சாலைகளின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அல்லது கழிவு நீர் கால்வாய் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் நிதி நிலைக்கேற்ப அமைக்கப் படுகிறது. இவ்வாறு  அமைக்கப்படும் கால்வாய்களால் மழை காலங்களில் வெள்ளநீர் தெருக்களில் தேங்காதவாறு வெளியேற்றப்படுகிறது.  ஆனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்படும் பிரதான சாலைகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைநீர்  வடிகால்வாய் அல்லது கழிவு நீர்கால்வாய் அமைக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை நெடுஞ்சாலைத்துறைதான் மேற்கொள்ளவேண்டும் என்றும் அதற்கான நிதியை மாநில அரசு தனியாக ஒதுக்கீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள  சாலைகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க முடியாத நிலை உள்ளது. திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் பெரும்பாலான வற்றில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால், ஓஎம்ஆர் சாலை  நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கு மட்டும் கால்வாய் அமைக்கப்படவில்லை. ஒரு மணி நேரம் மழை பெய்தால்  சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம்போல் மாறிவிடுகிறது.

இந்த சாலை வழியாக வாகனங்கள்  செல்லும்போது, சாலையில் நடந்து செல்வோர் மீது தண்ணீர் பீச்சியடிக்கப்படுகிறது. மேலும் பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால்  சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில்  உள்ள பிரதான சாலைகளிலும் மழைநீர் கால்வாய் அமைக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

Related Stories:

>