நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிவறை: மது பாட்டில்களால் செப்டிக் டேங்க் நிரம்பியது: இளம்பெண்கள் கடும் அவதி

நாகர்கோவில்: அண்ணா பஸ் நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிவறையால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம், மாவட்டத்தின் மிக முக்கியமான பஸ் நிலையம் ஆகும். இங்கிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல குக்கிராமங்களுக்கு  மினி பஸ்களும் இங்கிருந்து செல்கின்றன. காலை முதல் இரவு வரை பயணிகள் மற்றும் இளம்பெண்கள், கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும்.

பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையத்தின் பின்புற வாசலையொட்டி, கட்டண கழிப்பிடம் உள்ளது. கடந்த 10 நாளுக்கும் மேலாக கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. செப்டிக் டேங்க் நிரம்பி விட்டதால், அதை கிளீனிங் செய்யும் பணி நடந்தது.  ஆனாலும் முழுமையாக சரி செய்ய முடிய வில்லை. மீண்டும் 2, 3 நாட்களில் கோப்பையில் அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றம் வீச தொடங்கியது.

இதனால் கழிவறையை நிரந்தரமாக மூடி விட்டனர். இதன் காரணமாக பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகள், இளம்பெண்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே உடனடியாக இந்த கழிவறையை சுத்தம் செய்து திறக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, கழிவறை கோப்பைக்குள் மதுபாட்டில்களை வீசி விட்டு செல்கிறார்கள். இதனால் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2, 3 முறை சுத்தம் செய்யும் பணி நடந்தது.  ஆனாலும் முழுமையாக மது பாட்டில்களை எடுக்க முடிய வில்லை. கோப்பைகளை உடைத்து தான் அதை சரி செய்ய வேண்டும். 2, 3 நாட்களில் பணிகள் தொடங்கும். கழிவறை பயன்படுத்துகிறவர்கள் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்.  கழிவறைக்குள் மது பாட்டில்களை கொண்டு செல்ல கூடாது என எச்சரித்த போதும் ரகசியமாக பதுக்கி கொண்டு செல்கிறார்கள் என்றனர்.

மிரட்டிய அதிகாரி மீது புகார்

தமிழ்நாடு அரசு மாவட்ட வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் அருள், கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில், அண்ணா பஸ் நிலையத்தில் கழிவறை மூடப்பட்டு இருப்பதால், மக்கள்  படும் கஷ்டமான நிலை குறித்து புகார் அளிப்பதற்காக மாநகராட்சி அலுவலகம் சென்றேன்.  அப்போது மாநகராட்சி வருவாய் பிரிவில் இருந்த அதிகாரி, என்னிடம் எந்த விபரமும் கேட்காமல் மிகவும் அவதூறாக, சாதி பெயரை கூறி பேசி திட்டி  வெளியே செல்லுமாறு மிரட்டினார். நான் எனது சொந்த தேவைக்காக செல்ல வில்லை. பொது பிரச்சினைக்காக புகார் தெரிவிக்க சென்றேன்.  ஆனால் அதை கூட கேட்காமல், மிகவும் அவதூறாக பேசி மிரட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். அந்த அதிகாரியை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories: