‘நூறு ரூபாய் கூட வெக்க மாட்ட’..! எதுவும் கிடைக்காமல் திருட வந்த இடத்தில் எழுதிவிட்டு சென்ற நபர்: ஏலகிரியில் சுவாரஸ்யம்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் மற்றொரு கெஸ்ட் ஹவுஸில் திருட முயன்று எதுவும் கிடைக்காதலால் ஒரு நூறு ரூபார் வெக்க மாட்ட என எழுதிய மர்ம நபர்கள். 3 தனிப்படை அமைத்து பிடிக்க டிஐஜி உத்தரவிட்டுள்ளார். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, மஞ்சம்கொள்ளை புதுார் கிராமத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள், கெஸ்ட் ஹவுஸ் பூட்டை உடைத்து திருட முயன்றனர். ஆனால், அங்கு எதுவும் கிடைக்காததால், மர்ம நபர்கள் சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து டிஐஜி காமினி தலைமையில் எஸ்பி விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் திருடர்களை பிடிக்க ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமி, நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமார், ஏரிக்குப்பம் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் தலைமையில்  மூன்று தனிப்படை அமைத்து மர்ம நபர்களை பிடிக்க டிஐஜி காமினி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் அருகில் யார்? யார்? சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார்கள் என சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியில் வாணியம்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அதில் கீழ்தளத்தில் காவலுக்காக கணவன், மனைவி இருவர் இருந்தனர். முதல் தளத்தில் சென்று பார்த்தபோது கதவின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளையர்கள் அங்கும் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. ஆனால் அங்கும் பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் அங்கிருந்த டிவியை உடைத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த விலை உயர்ந்த மதுபானத்தை அங்கேயே அமர்ந்து குடித்துவிட்டு, லிப்ஸ்டிக்கால் ”ஒரு நுாறு ரூபாய் வெக்க மாட்ட” என சுவற்றில் எழுதியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த நோட்டு புத்தகத்தில் ”ஒரு ரூபாய் கூட இல்ல... எடுக்கல” எனவும்  எழுதி சென்றுள்ளனர். மேலும், அடுத்தடுத்து இரண்டு கெஸ்ட் ஹவுஸில், மர்ம நபர்கள் பணம், நகை எதுவும் கிடைக்காததால் விரக்தியடைந்து, சிசிடிவி கேமரா பதிவில் பதிவாகி விடுவோம் என்ற பயத்தில் சிசிடிவி ரெக்கார்டரை கையோடு எடுத்து சென்றும், எதுவும் கிடைக்காமல் மது அருந்திவிட்டு மனக்குமுறலை எழுதிவிட்டு சென்ற சம்பவம் ஏலகிரி மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த மர்ம கும்பலை பிடிக்க சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமாரும், தங்கும் விடுதிகள் ஆளில்லாத கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்ய ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமியும், பெங்களூர், சித்தூர், கர்நாடகா, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மர்ம நபர்களை கண்காணித்து பிடிக்க கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: