அபராத வசூலில் ஆர்வம் காட்டும் பெங்களூரு போலீஸ்: மக்கள் பாதுகாப்பு, நெரிசல்களை தவிர்ப்பதில் அலட்சியம்

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை காட்டிலும், அபராதம் வசூல் செய்வதில்  போலீசார் அதிகளவு ஆர்வம் காட்டி வருவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தொழில் நூட்ப நகரம் பெங்களூருவில் கொரோனா காலக்கட்டத்தில் போலீசாரின் பணிகள் சிறப்பாக இருந்தது. தற்போது கொரோனா இரண்டாவது  அலை உருவாகியுள்ளது. மீண்டும் அவர்கள் வாரியர்சாக செயல்வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கொரோனா முதல் அலையின் போது  போலீசாருக்கு சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டியது குறையாக இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வு அமலில் உள்ளது.  இரண்டாவது அலை தீவிரமாகும்போது இரவு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் போக்குவரத்து போலீசாருக்கு சாலை போக்குவரத்துகளை கண்காணிக்கவேண்டியது மற்றும் பாதுகாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  ஆனால் நகரில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீசாரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் செய்யும் பணிகளில் ஈடுபடுவது, மிகவும்  ஆச்சரியமாக அமைந்துள்ளது.இதற்கு முன்னதாக ஒரு சில இடங்களில் மட்டுமே போலீசார் நின்று கொண்டு அபராதம் வசூல் செய்வார்கள். ஆனால் தற்போது அனைத்து  இடங்களிலும் நின்று கொண்டு அபராதம் வசூலிக்க தொடங்கிவிட்டனர். இதற்கு காரணம் பெங்களூருவை போக்குவரத்து விதிமுறை மீறல்கள் இல்லாத நகரமாக மாற்றவேண்டும் என்பதுதான் என்று கூறப்படுகிறது. அதற்கு  வசூல் வேட்டை மட்டுமே முடிவாகிவிடாது. மாறாக போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் மீறாத அளவிற்கு போதிய விழிப்புணர்வு  ஏற்படுத்தவேண்டும்.

மேலும் ஒவ்வொரு முறையும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான அபராத தொகை விவரங்களை போலீசார்  வெளியிடவேண்டும். மேலும் சிக்னல்களில் இருக்கும் மேகராக்களை வைத்து, விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணிக்க படுவார்கள் என்பதை  எச்சரிக்கவேண்டும். இது தவிர ஒவ்வொரு சிக்னல்களில்,  வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறாத அளவிற்கு காவலர்களை நியமித்து  கண்காணிக்கவேண்டும். ஆனால் பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் இருப்பது இல்லை. அதனால்  வாகன ஓட்டிகளிலும் விரும்பியபடி, சிக்னல் ஜம்பிங், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, 3 பேர் ஒரே வாகனத்தில் செல்வது, லைசென்ஸ், வாகன  ஆவணங்கள் இல்லாமல் பயணித்து வருகின்றனர்.

பாதுகாப்பிற்கு, போக்குவரத்து விழிப்புணர்விற்கு, போக்குவரத்து நெரிசல்களை சீரமைப்பதற்கு போலீசார் இல்லாமல், அபராதம் வசூல் செய்வதையே  குறியாக வைத்து கொண்டு செயல்படுவது, போலீசாரே விதிமுறைகளை மீறி செய்துவிட்டு, பின்னர் அவர்களே அபராதம் வசூல் செய்வதுபோன்று  உள்ளது. அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடுகிறது. தவறு செய்வதற்கு முன்பு அதை தட்டி திருத்த செய்வதே போலீசாரின் கடமை.  முறையான போக்குவரத்து பாதுகாப்பு இல்லாமல் அபராதம் மட்டும் வசூல் செய்வது. நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் விதிமுறைகளை மீறி  கொள்ளுங்கள். எங்களுக்கு தேவை அபராத தொகை மட்டுமே என்று போலீசாரின் செயல்பாடு உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மாகடி ரோடு போக்குவரத்து ஏ.எஸ்.ஐ ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தினார். அவரை போன்று வேறு எந்த இடத்திலும் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவில்லை.

மேலும் அபராதம் என்ற பெயரில்  திருடனை பிடிப்பதுபோன்று மறைந்து நின்று பிடிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. முதலில் இந்த நடவடிக்கை  குறைவாகத்தான் இருந்தது. பின்னர் நாளடைவில் அதையே வாடிக்கையாக்கிவிட்டனர்.  இதற்கு போலீசார் அதிகளவு தேர்வு செய்யும் இடம் சாலை  வளைவுகள்தான். விபத்து பகுதி மெதுவாக செல்லுங்கள் என்று பலகை வைக்கும் இடத்தில் போலீசார் நிற்கிறார்கள் கவனமாக செல்லுங்கள் என்று  கூறும் அளவிற்கு, போலீசார் அபராத வசூல் பெயர் பெற்றுவிட்டது. இந்த காலக்கட்டங்களில் வாகனங்களில் செல்லும் பலர், அதிகளவு பணம் எடுத்து செல்வது கிடையாது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தும்போது,  வாகன ஓட்டிகளில் பீதி ஏற்படுவது, கால நேரமும் வீணாகிவிடுகிறது. பின்னர் கிடைத்த பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு, செல்லும் நிலை  ஏற்படுகிறது. இதனால் மற்றொரு புறம் லஞ்சம் வாங்கும் பழக்கமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஞாயிற்று கிழமையை தவிர பிற  நாட்களில் இதே வேலைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு புறம் நன்மையென்றாலும் மற்றொரு புறம் மக்களுக்கு சிறிது  பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விதிமுறை மீறல்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என்று கூறும் போலீசார், அதே நேரம் வாகன நெரிசல்களை  சீர் செய்வது, சாலை விபத்துகளை தடுப்பது, ஆக்கிரமிப்பு சாலைகளை அகற்றுவது, திருட்டு வாகனங்களை கண்டுபிடித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினால் நலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வசூல் செய்வதற்கு கூட்டமாக நிற்கும் போலீசார், சிக்னல்களில் வாகனங்களை சீராக செல்வதற்கு நிற்பது இல்லை. பெயருக்கு ஒரு போலீஸ் அல்லது  ஊர்காவல் படையை சேர்ந்த ஊழியரை அமர்த்தி வைத்துவிட்டு, பிற இடங்களில் அபராத தொகை வசூல் வேட்டை நடைபெறுகிறது. இது குறித்து  பொதுமக்கள் தரப்பில் கூறும்போது; காலையில் அவசரமாக வேலைக்கு செல்லும்போது, திடீரென்று போலீசார் மறித்துவிடுகின்றனர்.

 பழைய போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான அபராதத்தை வசூல் செய்வதாக கூறி, இருக்கிற பணத்தை பறித்து கொள்கின்றனர். அவர்களிடம்  பணத்தை கொடுத்துவிட்டு, டீ கூட குடிக்க முடியாமல், வெறும் கையுடன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு,தான் வீட்டிற்கு வரவேண்டியுள்ளது. சில  நேரங்களில் குழந்தைகளுக்கு மருந்து வாங்குவதற்கு எடுத்து செல்லும் பணத்தையும் அபராத தொகை என்ற பெயரில் வசூலித்துவிடுகின்றனர். இது போக்குவரத்து போலீசார் மற்றும் மக்கள் தரப்பில் நன்மையானதுதான் என்றாலும், சாலை வசதிகளை மேம்படுத்தி கொடுக்கவேண்டியதும்  போலீசாரின் கடமைதானே. பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் சிக்னல் இல்லை. அவ்வாறு சிக்னல் இருந்தாலும், அங்கு போலீஸ்  பாதுகாப்பிற்கு இருப்பது இல்லை. மக்கள் நினைத்ததுபோன்று வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.

மேலும் பல இடங்களில் சிக்னல் கேமராக்கள் இருப்பது தெரிவது இல்லை. கேமரா இருப்பது தெரிந்தால் போக்குவரத்து விதிமுறைகளை மீற  பயப்படுவார்கள். அதே நேரம் பல மணி நேரம் சிக்னல்களில் காத்திருக்கும் வாகனத்தை அப்புறப்படுத்த முடியாமல் போலீசார், ஹெல்மெட்  அணியாமல் பயணிப்பவர்களை படம்பிடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டும் முக்கியம் என்பதை கருதி அவர்கள் வேலை பார்க்கவேண்டும்.  தவறு செய்தால் அபராதம் வசூலிக்கும் போலீசார், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நகரில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமான சாலைகள் உள்ளது. அதை மாநகராட்சியுடன் சேர்ந்து சீர் செய்வது இல்லை. மாறாக அந்த  சாலைகளால் ஏராளமான விபத்துகள் அரங்கேறி வருகிறது. இரவு நேரங்களில் ஏராளமான வாகன ஓட்டிகள், தங்கள் பைக்குகள் திருடுபோவதாக புகார்  அளிக்கின்றனர். போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டால் ஏராளமான வாகனங்கள் திருடுவதை தடுக்க முடியும்.

மேலும் அபராதம் வசூலிப்பதில் காட்டு ஆர்வம் திருட்டு, பைக்கை கடத்தி செல்பவர்களை கண்டுபிடிப்பதில் காட்டினால், வாகனத்தை இழந்தவர்களுக்கு  அவை திருப்பி கிடைக்க வாய்ப்பு இருக்கும். இவ்வாறு பல்வேறு பணிகளுக்கு மத்தியில் நம்பர் பிளேட் சரியாக இல்லாத வாகனங்களை அடையாளம்  கண்டு, மொத்த அபராதத்தை வசூலிப்பதை குறியாக கொண்டு செயல்படுவது, காவல் துறையில் பணப்பற்றாக்குறை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை  ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விபத்திற்கு வழிவகை

சிக்னலில் இருந்து வேகமாக செல்லும் வாகனத்தை, அடுத்த சில அடி தூரங்களில் போக்குவரத்து போலீசார் வழிமறிக்கின்றனர். 10, 20 வாகனங்கள்  செல்லும் போது வழிமறிப்பதால், சிலர் தடுமாறிவிடுகின்றனர். ஒரு வாகனம் தடுமாறும்போது, பின்வரும் வாகனங்களின் அதன் மீது மோதும் நிலை  ஏற்படுகிறது. மேலும் வளைவுகளில் மறைந்து இருந்து கொண்டு, திடீரென்று வாகனத்தை நிறுத்தும்போது, சிலர் பயந்து, வாகனத்துடன் கீழே  விழுந்துவிடுகின்றனர். அல்லது வேறு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்.

மக்களை பாதுகாப்பதற்கு போலீசார் என்று பெயர் இருந்த நிலையில் வசூல் வேட்டைக்காக போலீசார் என்று மாறிவிட்டது. இதற்கு முன்னதாக  போக்குவரத்து விதிமுறை மீறல் இருந்தால், வீடுதேடி அபராத தொகைக்கான ரசீது வரும். அருகேயுள்ள காவல் நிலையத்தில் அபராத தொகையை  செலுத்திவிடவேண்டும். செலுத்த தவறினால் பிற இடங்களில் போலீசார் சோதனை நடத்தும்போது, வசூலித்து கொள்ள அனுமதி இருந்தது. ஆனால்  தற்போது அந்த நிலை மாறிவிட்டது. ஒவ்வொரு இடங்களில் போலீசார் செல்போனும் கையுமாக நின்று கொண்டு, ஒரு புறம் விதிமுறைகளை  மீறுபவர்களை போட்டோ பிடித்து மற்றொரு புறம் அபராத வசூலிப்பதுமான செயல்பட்டு வருகின்றனர். பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் சிக்னல் இல்லை. அவ்வாறு சிக்னல்  இருந்தாலும், அங்கு போலீஸ் பாதுகாப்பிற்கு இருப்பது இல்லை.  மக்கள்  நினைத்ததுபோன்று வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்

Related Stories: