கட்டாய இந்தி திணிப்பை கைவிடக் கோரிக்கை: குடியரசு தலைவருக்கு மனு அளிக்க முடிவு

பங்காருபேட்டை: தென்மாநிலங்களில் இந்தி மொழியை கட்டாயமாக திணித்து வரும் மத்திய அரசின் முடிவை கைவிட உத்தரவிட வேண்டும் என்று  குடியரசு தலைவருக்கு ஜனதிகாரா அமைப்பு சார்பில் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.  இது குறித்து ஜனதிகார அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி கூறும்போது, ``நாட்டில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படாது என்று  நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்த பண்டித் ஜவஹர்லால் நேரு உறுதியளித்தார். ஆனால் மத்தியில் ஆளும் பாஜ அரசு, நேருவின்  உறுதிமொழியை மீறும் வகையில் கட்டாய இந்தி திணிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

 இந்தியா பல மொழி, மதம், இனம், பண்பாடு, கலாச்சாரம் கொண்ட மக்கள் கூடி வாழும் நாடாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது  தத்துவமாகும். இந்த தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு அமைந்து வருகிறது. கட்டாய இந்தியை மத்திய அரசு  அறிமுகம் செய்தால், நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கும். தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் தனி தனியாக பிரிந்து மீண்டும் பல கூறுகளாகி விடும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்  என்றார். அதை தொடர்ந்து கட்டாய இந்தி மயமாக்கல் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு  மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: