சில்லறை கடைகளுக்கனா தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது: சி.எம்.டி.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு கோயம்பேடு வியாபாரிகள் போராட்டம்

சென்னை: கோயம்பேடு சந்தையில் சில்லறை விறபனைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதை எதிர்த்து சிஎம்டிஏ நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறு, குறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் ஊரடங்கு தளர்வுகள் நாளை முதல் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொழுதுபோக்கு பூங்கா, திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயம்பேட்டில் கட்டுப்பாடு விதிப்பு சில்லரை வணிக தடைக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பெருந்தொற்றுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வணிகமே சீரழிந்த நிலையில், வணிகம் செய்துவரும் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், சில்லரை வணிகர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி இருந்தது. ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பின்னர்தான் படிப்படியாக கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டு, தற்போதுதான் அரை வயிற்று கஞ்சியாவது சில்லரை வணிகர்களுக்கு கிடைக்கும் நிலை எட்டப்பட்டிருக்கிறது.

சில்லரை வணிகத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுழற்சி முறையில் வணிகம் நடைபெற்று, வணிகர்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும். கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலாக்கம் என்ற பெயரில், பல்வேறு துறை தலையீடுகளினால் அதிகார அத்துமீறல்கள் இருக்குமேயானால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவற்றை எதிர்த்து போராடவும் களம் இறங்கும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறது என தெரிவித்தனர். அதன்படி; 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கோயம்பேடு நிர்வாக அலுவலகத்துக்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில்லறை கடைகளை மட்டும் தடை விதிக்க சொல்லும் போது வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும் என்ற கருத்தை முன்வைத்து தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: