அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் சிறப்பு பிரிவு ஏற்படுத்தி 24 மணி நேரமும் சிகிச்சை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: உடல்நலம் பாதித்த எனது தாயாரை மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் சேர்த்தேன். கொரோனா மற்றும் ரத்த பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

 இதைப்போல மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி உடனடியாக சிகிச்சை அளித்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இதேபோல், குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் அனைத்து வசதிகளுடன் செயல்பட உத்தரவிட  வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டது. எனவே, அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், குழந்தைகள் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தி 24 மணி நேரமும் செயல்படவும் அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: