ஆற்காடு தொகுதியில் கொளுத்தும் வெயிலிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு

ஆற்காடு : ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் கொளுத்தும் வெயிலிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 14வது பொது தேர்தல் நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,  பாமக வேட்பாளராக கே.எல்.இளவழகன்,  அமமுக வேட்பாளராக என்.ஜனார்த்தனன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர்.

ஆற்காடு தொகுதியில் மொத்தமுள்ள 368 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்களித்தனர். ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகன் கீழ்விஷாரம் ராசாத்துபுரம் அரசு இந்து மேல்நிலைப்பள்ளியில் தனது  குடும்பத்தினருடன் வாக்களித்தார். காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததால் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து, கொளுத்தும் வெயிலிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். கொரோனா தடுப்பு மற்றும் வெயிலால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க பல வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்பு தற்காலிகமாக பந்தல் போடப்பட்டது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டது. வாக்காளர்களுக்கு வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டது.

சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு வாக்குப்பதிவு செய்ய ஒரு முறை உபயோகப்படுத்தும் கையுறை வழங்கப்பட்டது.ஆற்காடு தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 64.67 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இது கடந்த சட்டமன்ற தேர்தல்களின் போது மாலை 3 மணி நிலவரப்படி நடைபெற்ற  வாக்குப்பதிவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: