மாவட்டங்களில் 10 முதல் 1 மணிவரை சேவை நிறுத்தம்: சென்னையில் 30 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கம்: வாக்குச்சாவடி செல்ல முடியாமல் மக்கள் அவதி

சென்னை: தேர்தல் நாளில் அதிகமாக பஸ்களை இயக்க வேண்டிய நிலையில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நேற்று போதுமான அளவிற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வாக்களிக்க குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும், பிற மாவட்டங்களில் வாக்களித்தவர்கள்  சென்னைக்கு வரமுடியாமலும் அவதிப்பட்டனர். அந்த வகையில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே ஷிப்ட் முறையில் காலை 10 முதல் 1, மதியம் 2 முதல் 5 என்று நிறுத்தப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், தொற்று பரவல் குறைந்ததால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில், 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒருபகுதியாக அனைத்து தனியார், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது.

இதனால், கடந்த 1ம் தேதி முதலே சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் வாக்களிக்க தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல ஆரம்பித்தனர். இவர்களின் வசதிக்காக தினசரி இயக்கூடிய பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டது. அந்தவகையில், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதேபோல், சென்னையில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் விரைவாக சென்று வாக்களிக்க உடனுக்குடன் பேருந்து சேவை கிடைக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோர் காலையிலேயே வாக்களிக்க வாக்குசாவடி மையங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், எதிர்பார்த்த அளவிற்கு பேருந்து சேவையில் சென்னையில் இயக்கப்படவில்லை. குறிப்பாக மாவட்டங்களில் காலை 10 மணி முதல் 1 மணிவரை பஸ்கள் நிறுத்தப்பட்டது. மேலும் கோயம்பேட்டில் இருந்து நூற்றுகணக்கான பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் லிங்க் பஸ் பிடித்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் பல இடங்களில் பேருந்து சேவை 30-4 சதவீதம் மட்டும் இயக்கப்பட்டது. பல இடங்களில் வாக்களிக்க செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கேப் சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வாக்கு சாவடிகளுக்கு சென்றனர். திருவான்மியூர், வேளச்சேரி, திருவெற்றியூர், அடையாறு உள்ளிட்ட முக்கியமான வழித்தடங்களில் நீண்ட நேரமாக பேருந்துகள் வராததால் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், மாலை நேரத்திலும் வாக்களித்துவிட்டு வீடுகளுக்கு செல்பவர்களும் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Related Stories: