வாக்குச்சாவடிக்குள் செல்ல திமுக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு: பெண் இன்ஸ்பெக்டர் அடாவடி

அண்ணாநகர்: அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.ேக.மோகன், அமைந்தகரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியை நேற்று காலை  பார்வையிட சென்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் அவரை வாக்குச்சாவடி உள்ளே செல்ல விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.ேக.மோகன், நேற்று காலை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய வந்தார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமைந்தகரை பெண் இன்ஸ்பெக்டர் நசிமா பேகம், திமுக வேட்பாளரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர், ‘‘நான் வேட்பாளர், உள்ளே செல்ல அனுமதியுங்கள்’’ என்று கூறினார். அதன் பிறகும் பெண் இன்ஸ்பெக்டர் அவரை வாக்குச்சாவடி உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 15 நிமிடம் கழித்து, திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை உள்ளே செல்ல அனுமதித்தார். ஆனால், உடன் வந்த அமைந்தகரை திமுக வட்ட செயலாளர் பாபு என்பவரையும் உள்ளே செல்ல விடமால் எஸ்ஐ தில்லைவேல்முருகன் தடுத்தார். அப்போது பாபு, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘‘அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா’’ எனக் கேட்டார். ஆனாலும், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால், வாக்கு சாவடிக்கு வந்த அதிமுகவினருக்கு மட்டும் சலாம் போட்டு போலீசார் உள்ளே அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: